புரட்சி எனும் சொல்

சொற்களால் ஒரு பெரும் தேசம் செய்யப்பட்டது

அங்கு வானம் என்ற சொல் தலைக்குமேல் விரிந்திருந்தது

செதில்களும் , முட்களும் கொண்ட சொற்கள் குட்டைகளில் நீந்திக்கொண்டு இருந்ததன

எழுச்சி என்ற சொல் இங்கு “பாவனைக்கு தடை” என்ற அறிவுறுத்தல் சுவர் முழுதும் ஒட்டப்பட்டிருந்தது

மெலிந்த குழந்தைகள் பால் என்னும் சொல்லை உறிஞ்சிக்கொண்டிருந்தனர்

அரசபயங்கரவாதம் எனும் கடும்சொல்
கருப்புப்பை நிறைய சொற்களை மண்ணில் புதைத்துக்கொண்டிருந்து

பின்னாளில் பெய்த சிறு தூறலில் அந்தமேட்டில் புரட்சி என்னும் சொல் முளைக்கத்தொடங்கியது .

சிந்துஜன் நமஷி

21.07.2018
13.05

Advertisements

மழைக்காதல்

” குடை பத்திரம் ” என்று
உயர்த்தி காட்டிவிட்டு
பைக்குள் திணிக்கிறாள்
என் தர்மபத்தினி
முதல்துளி நெற்றியில் பட்டு
சிதற உயிர்கொள்கிறது என்
சோழர்காலத்து குடை .

அரேபிய ஆணும் ,
சீன பொம்மை போன்றவளும்
எழுந்து வருகின்றனர்
என்னதான் குடை
என்னதாய் இருந்தாலும்
அவர்களின் பூர்வஜென்மத்தை
அறிய நான் முயலவில்லை .

இருவர் கண்களிலும்
ஒரு யுகத்தின் காதல்
சொட்டிக்கொண்டே இருந்தது.

அவள் தலை சாய்த்து
அவன் இதழ் பருக
தன்னை ஸ்தம்பித்து முழுநகரும்
வேடிக்கை பார்க்கிறது .

மழையில் கரைந்தபடி
ஈர முத்தம் தருவது
அவர்களுக்கு பிடித்திருந்தது .

வீடு திரும்பலாம் என்றால்
கொண்டுபோன குடை எங்கே
என்று கேட்பாளே என்
தர்மபத்தினி !
என் குடையிலும்
அவர்கள் முத்தம் பெரியதன்றோ
தீராக்காதலை அவர்கள்
தீர்த்துவிட்டு வரட்டும்
அதுவரை மழையில்
நனைந்தபடியே
காத்து நிற்கிறேன் .

சிந்துஜன் நமஷி
18 . 07. 2018
20.02

போர்க்கால ராஜாளிகள்

போர் முடிந்த பின்னிரவுகள்
உஷ்ணக்காற்றை ரத்தக்கவுச்சியால்
நிரப்புகிறது .

ஓர் கிரீடத்தின் நிலைத்தலுக்காய்
உருண்டு கிடக்கும் சிப்பாய்களின்
தலைக்கவசங்களில் மூளைத்துகள்கள்
தேடி நிற்கிறது எதிரி நாட்டு நாய்கள்

குறிவைக்கவும் , இயக்கவும் ஆள்
இன்றி புகைந்துகொண்டிருக்கின்றது
ரெட்டைக்குழல் பீரங்கி

தாய் மண்ணை அள்ளி நெஞ்சில்
அணைத்துக்கொண்டு இறந்து கிடப்பவனின்
விரலிடுக்குகளினூடு முளைக்க எத்தனிக்கிறது தாவரம்

நீண்டநேரமாய்
காவல் நிற்கிறது முறிந்த

கொடிமரத்தின் உச்சியில்
கொலைப்பசியோடு ஒரு ராஜாளி

சேதவிபரம் கேட்டுவிட்டு
திராட்சை ரசம் பருகுகிறான் மாமன்னன்
கொடி கோட்டை உச்சியில் பட்டொளிவீசி பறக்கிறது .

நகரத்து காகங்கள்

ஒரு அசைவில் ,
ஒரு பார்வையில் ,
ஒரு அதட்டலில்,
கிராமத்து காகங்கள்
அதிர்ந்து பறப்பதைப்போல
நகரத்து காகங்கள்
செய்வதில்லை .

நம் அசைவும் ,
பார்வையும் ,
அதட்டலும் ,
அதன் இருப்பில் எந்த
அதிர்வையும் நிகழ்த்தாது
என அவை நம்புகின்றன

நிதானமாய் தலை திருப்பி
நேர் எதிராய் நோக்கும் .
அப்போது அவற்றின் கண்கள்
ரத்தச் சிவப்பாய் மாறத்தொடங்கும்

சிந்துஜன் நமஷி

பொறுப்பு துறத்தல்

பெரும் ஆடு
வேள்விக்கெண்டு வெள்ளையம்மாள்
வளத்த ஆடு

செவ்வரத்தம்பூவில
மாலை போட்டு
மலை நெடுக இழுத்து வந்து
அய்யனார் காலடில
கட்டிப்போட்டாள்

பித்தளை குடத்தில
தண்ணிநிறைச்சு
மஞ்சளும் , வேப்பங்குழையும்
கலந்து
தலைக்கு ஊத்த ,
விபரீதம்
தெரியாம ஒரு சிலிப்பு சிலுப்பிச்சி

அகண்ட நெஞ்செல்லாம் சந்தனம்
தடவி
அருவாள் முனையிலே எலுமிச்சை
குத்தி
நெடுஞ்சாண் நிழலொன்று
பக்கத்தில வந்து நிக்க
பாவம் !

ஆதரவென்று

நினைச்சிருக்கும்

ஒரே பொடில தலை துண்டாக
கழுத்து நெரிச்சு ரத்தமெடுத்து
சாமி காலெல்லாம் பூசி விட்டு
” நீதான்யா என் குடும்பத்தை
காப்பதோணும் ”
எண்டு உருகி நிண்டாள்
வெள்ளையம்மாள்

விழுந்த தலை அய்யனாரை
முறைக்க
ஆட்டு மூஞ்சில முழிக்க
கூச்சப்பட்டு
மீசை தொங்கி நின்னாரு
அய்யனாரு

-சிந்துஜன் நமஷி

02.07.2018

பசித்திருந்த பொழுதுகள்

வறண்ட தொண்டைக்குள்
எச்சில் இறங்குவது
பருத்த கடிகாரத்தின்
டிக் டிக் டிக் யும் தாண்டி
கேட்கிறது

பிரசவத்திற்கு தயாரான
பெட்டை நாயொன்று
குளிருக்கு இதமாய்
ஓர் நாற்காலியின் கீழ்
சுருண்டுகொள்கிறது

தெருவின் மஞ்சள் விளக்கடியில்
தன் சதைக்கு கடை விரித்து
உடற்பசி தீர்த்துவைக்க
காத்திருக்கிறாள் ஒருத்தி

முதுமை தின்ற மிச்சமொன்று
மரணப்பசியை விரட்டி விட்டபடி
தொய்ந்த தோலில்
ஊசிமுனையால் போதை
ஏற்றிக்கொள்கிறது .

சேர்வதும் பிரிவதுமாய்
திரண்டு கிடக்கும் தண்டவாளங்கள்
பசித்தவன் குடலை
பிரதியெடுக்கிறது .

ஏப்பம் விட்டபடி பேரிரைச்சலோடு
நுழைகின்றது ரயில்
அனைவர் பசிக்கும் சேர்த்து
தானே
தின்றது போல

சாத்தானின் சாயல்

அத்தனை பேர் கடந்து போனாலும்
அதோ !
அந்த தாமரை மலர்கள்
கொண்டுவருபவனை மட்டும்
முகம் பார்த்து புன்னகைக்க
வேண்டும் போல் இருக்கிறது

பதிலுக்கு அவனும் புன்னகைக்கிறான்

தெய்வத்தின் சாயல் அவன்
முகத்தில் தெரிந்தது
போல

என் சாத்தானின் சாயல்
அவனுக்கு
தெரியாமல் இருந்திருக்க
கூடும்

24.05.2018